இணைய சமவாய்ப்புக்குச் சாதகமாக தொலைத் தொடர்பு ஆணையம் புதிய உத்தரவு


இணையதளம் பயன்படுத்துவதில் பாரபட்சமான கட்டண அடிப்படையில் சேவை வழங்குவதை தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தடை செய்துள்ளது. இதன் மூலம் தற்போதைய நிலையில் சமவாய்ப்பான இணையதளம் கிடைப்பதில் ஏற்பட்ட விவாதம் முடிவுக்கு வந்துள்ளது. 
படம்: ராய்ட்டர்ஸ்.
இதற்கான தடையை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) திங்களன்று அறிவித்தது. இதனால் ஃபேஸ்புக் நிறுவனம் முன்வைத்த பிரிபேஸிக்ஸ் திட்டம் மற்றும் ஏர்டெல் நிறுவனம் முன்வைத்த ஏர்டெல் ஜீரோ திட்டங்களுக்கு பலமான பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் உள்ளடக்கம் அடிப்படையில் அமைந்த பாரபட்சமாக கட்டண சேவைகளை விற்பனை செய்ய தடை விதிப்பதாக டிராய் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. 

பாரபட்சமாக கட்டணம் அல்லது உள்ளடக்கம் அடிப்படையிலான இணைய சேவையை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான எந்த விதமாக ஒப்பந்தங்கள் அல்லது உடன்படிக்கைகளிலும் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் ஈடுபடக்கூடாது என்று அந்த உத்தரவில் டிராய் கூறியுள்ளது.

மேலும் சேவை வழங்குநர்கள் பாரபட்சமான கட்டணங்களை வசூலித்தால் நாளொன்றுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் டிராய் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. 

இந்த புதிய கட்டுப்பாடுகள் குறித்து தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மறு ஆய்வு செய்யும்.

தவிர்க்க முடியாத அவசர காலம் அல்லது பொது அவசர காலத்துக்கு மட்டும் ஏற்ப செயல்பட இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.