இந்திய இணைய மொபைல் கூட்டமைப்பு ஆதரிக்கும் நெட் நியூட்ராலிட்டி

ஒரு சில மொபைல் போன் சேவை நிறுவனங்களோ, இணைய இணைப்பு தருவதாக இருந்தால், குறிப்பிட்ட தளங்களைக் காண தங்களுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என திட்டங்களைத் தீட்டினார்கள். இவர்களே, அந்த இணைய தள நிர்வாகத்திடம், “உங்களுடைய இணைய தளங்களை விரைவாகக் காட்ட, எங்களுக்குப் பணம் செலுத்துங்கள்” என்று கேட்கத் தொடங்கின. இது பல்வேறு எதிர் கருத்துகளை மக்களிடம் இருந்து பெற்றன. அமெரிக்காவில், இது குறித்து பொதுமக்கள் எழுச்சி ஏற்பட்டது. அனைவருக்கும் சமமான இணைய இணைப்பு மற்றும் சேவை தரப்பட வேண்டும் என போராட்டம் ஏற்பட்டது. அமெரிக்க அரசு இதற்கு செவி மடுத்து, அப்படியே அதனைச் சட்டமாகவும் கொண்டு வந்தது.
இந்தியாவில் இது பாராளும் மன்றத்திலும், மக்களிடையேயும் பெரிய அளவில் வெடித்தது. மக்களின் எதிர்ப்பைக் கண்ட அரசு, தகவல் தொலை தொடர்பு துறையிடம் இது குறித்த அறிக்கையினைக் கேட்டது. இந்திய இணையம் மற்றும் மொபைல் நிறுவனங்களின் கூட்டமைப்பிடமும் அறிக்கை ஒன்றை அரசு கேட்டிருந்தது. இரண்டு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டன. அரசின் தகவல் தொலை தொடர்பு துறை அறிக்கை, எந்த ஒரு முடிவினையும் தெளிவாகக் குறிப்பிடாமல் முடிவுகளைத் தெரிவித்திருந்தது. நெட் நியூட்ராலிட்டி இந்தியாவில் நீர்த்துப் போய்விடுமோ என்ற அச்சம் மீண்டும் மக்களை வாட்டியது. மீண்டும் பல இணைய தளங்கள் வழியாக பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. அரசும் MyGov.in என்ற இணைய தளத்தில், அனைவரிடம் இருந்தும் கருத்துகளை கேட்டது. இந்தச் சூழ்நிலையில், இணைய சேவை மற்றும் மொபைல் சேவை நிறுவனங்களின் அமைப்பு அளித்துள்ள அறிக்கை, மக்களின் எதிர்பார்ப்புகளை பரிந்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. 
இலவசமாக இணைய இணைப்பு தருவதாகக் கூறி, சமமான இணைய இணைப்பினைத் தங்கள் விருப்பம்போல வளைக்கத் திட்டமிடும் நிறுவனங்களின் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும் என ஆணித்தரமாக இதன் அறிக்கை எடுத்துரைத்துள்ளது. இது போன்ற திட்டங்கள் மூலம், இணையத்தில் இயங்கும் பெரிய நிறுவனங்கள், இணையத்தின் வாசல் காவலர்களாக மாறி, மக்களை, இணையம் பயன்படுத்துவதில் பிரிவினையை ஏற்படுத்துவார்கள் எனக் கூறியுள்ளது. இது குறித்த தகவல் தொலை தொடர்பு துறையின் அறிக்கை, எதனையும் உறுதியாகக் கூறாமல், பலம் இழந்த ஒருவரின் கூற்றாக உள்ளது. அரசு இதனைப் புறக்கணித்து, இந்திய இணையப் பயனாளர்களின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் எனக் கேட்டுள்ளது. 
இணைய சேவை மற்றும் மொபைல் சேவை நிறுவனங்களின் அமைப்பிடம், 73 ஆயிரம் ஆவணங்கள், இணைய உரிமைையக் காத்திட சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, இந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்னும் தொடர்ந்து பலர் பல ஆவணங்களை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இணையத்தைப் பொறுத்தவரை, அதில் உள்ள அனைத்தும், அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என அனைவரும் ஒரே குரலில் தெரிவித்து வருகின்றனர். 
இணையம் வழியாக குரல் வழி இணைப்பு சேவையினை சில நிறுவனங்கள் மேற்கொள்ள உரிமங்களை வழங்கலாம் என்று தகவல் தொழில் நுட்ப துறை அறிக்கையில் தந்துள்ள முடிவினை, இணையம் மற்றும் மொபைல் அமைப்பான IMAI எதிர்த்துள்ளது. 
இந்த அறிக்கைகளைப் பெற்றுள்ள அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்