சவாலுக்கு அழைத்த ஏர்டெல் 4G சந்தி சிரித்த கதை!


நியூட்டன்அறிவியல்மன்றம்

மொபைல் நாயகன் ஏர்டெல் கடந்த மாதம் (ஆகஸ்ட் 2015)இந்தியாவின் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ஒருசவால் விடுத்தது. ஏர்டெல் 4Gயை விட அதிகமான வேகம்உள்ள எந்த நெட்வொர்க்காவது உண்டா என்று கேட்டது.அப்படி இருப்பதாக நிரூபித்தால், நிரூபித்தவரின் வாழ்நாள்முழுமைக்குமான மொபைல் செலவுகளை ஏற்கத் தயார்என்றது. ஏர்டெல் சவால் ( AirTel challenge) என்ற புகழ்பெற்றஇந்த விளம்பரத்தை, தொழில்நுட்ப விஷயங்களில் அக்கறைஉள்ள வாசகர்கள் அறிந்திருக்கக் கூடும்.

இந்தியாவில் 4G சேவையை நாங்கள்தான் முதன்முதலில்கொண்டு வந்தோம் என்று மார் தட்டுகிறது ஏர்டெல். ஏப்ரல் 2012இல் கொல்கத்தாவில் ஏர்டெல்லின் 4G சேவையை ன்றையதொலைதொடர்பு அமைச்சர் கபில் சிபல் தொடக்கி வைத்தார்.கொல்கத்தாவில் மட்டுமே இந்த சேவை கிடைத்தது. (Kolkatta is the launch pad of AirTel 4G) தொடர்ந்தும் அடுத்தடுத்தும் 51 நகரங்களுக்கு இந்த சேவை விரிவடைந்தது.
(beta launch in 51 towns)

4G உலகில் நுழைந்தது இந்தியா!

தற்போது, 2015 ஆகஸ்ட் 6 முதல் நாடு முழுவதும் 4G சேவையைஏர்டெல் வழங்குகிறது. பன்னிரண்டு தொலைதொடர்பு வட்டங்களில் உள்ள 296 நகரங்களில் 4G சேவையை ஏர்டெல்வழங்குகிறது. அதாவது நடப்பாண்டில் (2015ஆம் ஆண்டில்) மொத்த இந்தியாவும் 4G சேவையைப் பெறுகிறது.
இந்தக் கட்டுரை எழுதப்படும் இந்த நிமிடம் வரை, ஏர்டெல்லைத் தவிர வேறு எந்த நிறுவனமும் 4G சேவையை வழங்கவில்லை.2015 டிசம்பரில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் 4G சேவையை வழங்கப் போவதாக அறிவித்து உள்ளன. 

மெய்யான 4Gஅல்ல! LTE தொழில்நுட்பம்தான்!

ஏர்டெல் வழங்கும் 4G சேவை மெய்யான 4G தொழில்நுட்பம் கொண்டதல்ல. இது LTE (LONG TERM EVOLUTION) எனப்படும் தொழில்நுட்பம் ஆகும். 4G சேவை என்றால், 4G அலைக்கற்றை (4G Spectrum) வேண்டும் அல்லவா? ஆனால், இந்திய அரசு இதுவரை 4G அலைக்கற்றையை ஏலம் விடவோ ஒதுக்கீடு 
செய்யவோ முன்வரவில்லை என்னும்போது, 4G சேவை என்று உரிமை கோருவது சரிதானா? 
LTE தொழில்நுட்பம் என்பது இருக்கின்ற 3G அல்லது WiMAX அலைக்கற்றையை வைத்துக் கொண்டு அதில் தேவையான மேம்பாடுகளைச் செய்வதன் மூலம் 3Gயை விட அதிகமான வேகத்தைத் தருவது என்பதுதான். கொல்கத்தாவில் 4G சேவை வழங்கியதாக உரிமை கோரிய ஏர்டெல் நிறுவனம், சீனாவின் 
மொபைல் உற்பத்தி நிறுவனமான ZTE நிறுவனத்துடன் சேர்ந்து TD-LTE தொழில் நுட்பத்தில் சேவையை வழங்கியது. (TD என்றால் Time Division என்று பொருள். Time Division, Code Division, Frequency Division 
ஆகியவை தொலைதொடர்பின் தொழில்நுட்பங்கள் ஆகும்).
ஏர்டெல் வழங்கும் 4G சேவை மற்றும் பிற நிறுவனங்கள் வழங்க இருக்கும் 4G சேவை உட்பட, இவை யாவும் LTE தொழில்நுட்பச் சேவையே அன்றி மெய்யான 4G சேவை அல்ல.LTE என்பது 3Gயை விட மேலான ஆனால் 4Gயை விடக்குறைந்த சேவை ஆகும். அதாவது 3Gக்கும் 4Gக்கும் இடைப்பட்ட சேவை 
ஆகும். (It is a rational number between 3 and 4 but well beyond 3.5)

பொய்யாய்ப்போன ஏர்டெல் விளம்பரம்!



எங்களை விட வேகமான நெட்வொர்க் இருப்பதாக நிரூபித்தால் உங்களின் ஆயுட்காலம் முழுமைக்குமான மொபைல் கட்டணத்தை நாங்களே செலுத்துவோம் என்ற ஏர்டெல் விளம்பரம் இந்தியாவுக்குப் பொருந்தாது. ஏனெனில், இந்தியாவில், இதில் ஏர்டெல்லுடன் போட்டி போட எவரும் 
இல்லை. மற்ற எந்த நிறுவனமும் இன்னும் LTE சேவை வழங்கவில்லை. எனவே களத்தில் இருப்பது ஏர்டெல் மட்டும்தான். போட்டியே இல்லாதபோது, சவால் விடுவது எப்படிப் பொருந்தும்?

சர்வதேச அளவில் ஏர்டெல் வழங்கும் LTE சேவையின் வேகம் என்ன என்று பார்ப்போம். ஒப்பன் சிக்னல் (Open Signal) என்ற நிறுவனம் உலக அளவில், 68 நாடுகளில் இயங்கும் 183 LTE நெட்வொர்க்குகளைப் பரிசோதித்து அவற்றின் வேகத்தைக் கண்டறிந்தது.

நடப்பாண்டின் மூன்றாவது கால் பகுதிக்கான (Third quarter of 2015) பரிசோதனை முடிவுகளின்படி, ஏர்டெல் நிறுவனம் பதிவிறக்க வேகத்தைப் பொறுத்து (download speed)147ஆம் இடத்தில் இருக்கிறது. மொத்தம் 183 நெட்வொர்க்களில்ஏர்டெல் 147ஆவது இடம். முதலிடத்தில் நியூசிலாந்து 36 Mbps வேகத்துடனும், இரண்டாம் இடத்தில் சிங்கப்பூர் 33 Mbps வேகத்துடனும் உள்ளன. எனவே, எங்களை விட 
வேகம் யாருக்காவது உண்டா என்று ஏர்டெல் இந்தியாவில் மட்டும்தான் கேட்க முடியும். உலகத்தை நோக்கிக் கேட்டால் என்ன ஆகும்? அத்தனை பேரின் மொபைல் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் ஏர்டெல் திவால் ஆகும்!

தெருப் பொறுக்குவது பற்றிய தொலைக்காட்சி 

விவாதங்கள்!

ஆகஸ்ட் 6, 2015 அன்று இந்தியா 4G தொழில்நுட்பத்தில் நுழைந்து விட்டது. என்றாலும் 127 கோடி மக்களுக்கு இந்தச் செய்தி எட்டியதா? இல்லை. படித்த அறிவாளிப் பகுதியினருக்கே இந்தச் செய்தி இன்னும் போய்ச்சேரவில்லை. ஆங்கில ஏடுகளில்கூட 4G தொழில்நுட்பம் குறித்த கட்டுரைகள் எழுதப்படவில்லை,வணிக நோக்கில் வெளியான கட்டுரைகளைத் தவிர. முகநூல் வாசகர்களுக்காக எழுதப்பட்ட இந்தக் கட்டுரைதான் 4G குறித்த முதல் தமிழ்க் கட்டுரை என்று எங்களால் அடித்துக்கூற இயலும். இந்த நிலையில்தான் அறிவியல் உள்ளது.

தெருப்பொறுக்குவது எப்படி, அதில் உள்ள நுட்பங்கள் என்ன என்று மணிக்கணக்கில் விவாதம் நடத்தும் தமிழ் டி.வி சேனல்கள், முக்கியத்துவம் வாய்ந்த இந்த 4G குறித்து விவாதம் நடத்த முன்வருவார்களா? ஒருநாளும் மாட்டார்கள்! நாடு முன்னேறிவிடக் கூடாது என்று மூச்சிரைக்க இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கும் ஊடகங்கள் இதைச் செய்வார்களா, என்ன?

மேலும் விபரம் அறிய : மேலும் விபரம் அறிய