பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தம்




பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் நாடு தழுவிய இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதன் காரணமாக, தமிழகத்திலுள்ள அனைத்து அலுவலகங்கள், இணைப்பகங்கள், வாடிக்கையாளர் சேவை மையங்கள் ஆகியவற்றின் வாயில் கதவுகளைப் பூட்டி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியாருக்கு பி.எஸ்.என்.எல். பங்குகளை விற்க முடிவு செய்தது, போனஸ் வழங்காதது, எஸ்.சி.,எஸ்.டி. ஊழியர்களுக்கான சலுகைகள் குறைப்பு, பதவி உயர்வில் தாமதம், புதிய ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடு, ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றை ஒதுக்கீட்டு ஏலத்தில் தனியார் நிறுவனங்களுக்கே முன்னுரிமை உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது.
தமிழகத்தில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
இதன் காரணமாக, பழுது பார்ப்பு உள்ளிட்ட வாடிக்கையாளர் சேவைகளில் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டது.
வாக்குவாதம்: குறிப்பாக, சென்னையில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு ஊழியர்கள் பணிக்கு வராததால் வெறிச்சோடியது. மேலும், தொலைபேசி பழுது நீக்கம், "ப்ரீபெய்டு ரீசார்ஜ்' செய்யும் பணி, செல்லிடப்றபேசி, இணையதள சேவைகளுக்கான கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல பணிகள் பாதிக்கப்பட்டன.
முதல் நாள் வேலை நிறுத்தம் என்பதால், செல்லிடப்பேசி, இணையதள சேவை பாதிப்புக்குள்ளாகவில்லை.
மாறாக, தரைவழி தொலைபேசி சேவை பழுது நீக்கும் பணி முற்றிலும் முடங்கியதாக பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம், தொலைத்தொடர்பு ஊழியர்கள் தேசிய கூட்டமைப்பு உள்பட 16 தொழிற்சங்கங்களும் பங்கேற்றனர்.
வாயில் கதவைப் பூட்டி ஆர்ப்பாட்டம்: பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பெரும்பாலான அலுவலகங்கள் மூடப்பட்டன. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள், இணைப்பகங்கள், வாடிக்கையாளர் சேவை மையங்கள் பூட்டப்பட்டன.
குறிப்பாக, அலுவலங்களில் நுழைவு வாயில் கதவுகளைப் பூட்டி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசுக்கு நெருக்கடி தரத் திட்டம்

முதல் நாள் வேலைநிறுத்தம் என்பதால், வாடிக்கையாளர் சேவை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், தரைவழி தொலைபேசி பழுதுபார்ப்பு பணிகள் மட்டுமே முழுமையாகப் பாதிக்கப்பட்டன.
மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதாவது, தனியார் நிறுவனங்களும் பாதிப்புக்குள்ளாகும் வகையில் பி.எஸ்.என்.எல். தொலைபேசி, இணையதள சேவையை (பிராட்பேண்ட்) நிறுத்தி, மத்திய அரசை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கான முயற்சியில் ஊழியர் சங்கங்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.