"தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கடன் ரூ.3.5 லட்சம் கோடியாக அதிகரிக்கும்'

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மொத்த கடன் மதிப்பு ரூ. 3.5 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று இந்திய வர்த்தக சபைகளின் சங்கம் (அசோசேம்) தெரிவித்தது.
அசோசேம் அமைப்பின் தொலைத் தொடர்புக் குழுவின் தலைவர் டி.வி.ராமசந்திரன் புது தில்லியில் வியாழக்கிழமை இது தொடர்பாகத் தெரிவித்ததாவது: அண்மையில் நடைபெற்ற அலைக்கற்றை ஏலத்தின்போது, சுமார் 68% அளவு அலைக்கற்றையை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெற்றன.
800 மெகாஹெர்ட்ஸ், 1800 மெகாஹெர்ட்ஸ், 2100 மெகாஹெர்ட்ஸ் (3ஜி) ஆகிய அலைவரிசைகள் உள்பட, சுமார் 11% அலைக்கற்றை விற்பனையாகவில்லை. ஐடியா, ஏர்டெல், வோடஃபோன்,
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய தற்போதைய சேவைகளைத் தொடரும் விதமாக உரிமம் பெற அலைக்கற்றை ஏலத்தில் கலந்து கொண்டன.
ரிலையன்ஸ் ஜியோ, டாடா, டெலிவிங்ஸ் (யுனிநார்), ஏர்செல் கூடுதல் அலைக்கற்றை பெறுவதற்காக ஏலத்தில் கலந்து கொண்டன.
அரசு நிர்ணயித்த அடிப்படை விலை ரூ. 65,463.40 கோடியாகும். ஏலம் வழியாக அரசு சுமார் ரூ. 1,09,874.91 கோடி வருவாய் பெற்றது. தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஏற்கெனவே ரூ. 2.5 லட்சம் கோடி அளவு கடன் உள்ளது. இந்நிலையில், கடன் மதிப்பு சுமார் ரூ. 3.5 லட்சம் கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
உரிமங்களைப் பெறுவதற்கே பெரும் தொகையை நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதால், சேவைகளின் விரிவாக்கம், மேம்பாட்டுக்கான ஒதுக்கீடுகள் எதிர்பார்த்த அளவு இருக்க வாய்ப்பில்லை.
வாடிக்கையாளர்களின் கட்டணங்கள் உயரும் வாய்ப்புள்ளபோதிலும், நிறுவனங்களிடையே கடும் போட்டி உள்ளதால், செலவுகளை வேகமாக மீட்கும் விதமாக கட்டண உயர்வு இருக்காது என்று அவர் கூறினார்.

    அலைக்கற்றை ஒதுக்கீட்டுத்    

தொகையை 

மார்ச் மாத    இறுதிக்குள் செலுத்த வாய்ப்பு

அண்மையில் நடைபெற்ற அலைக்கற்றை ஏலத்தின்போது, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெற்ற ஒதுக்கீட்டுக்கான தொகையின் ஒரு பகுதி மார்ச் மாத இறுதிக்குள் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு நடத்திய ஏலத்தின் இறுதியில், அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் ரூ. 1,09,874.91 கோடி செலுத்த வேண்டியிருந்தது. வெவ்வேறு அலைக்கற்றைகளுக்கு வெவ்வேறு முன்தொகையை நிறுவனங்கள் ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் அரசுக்கு செலுத்த வேண்டும். இதன்படி ரூ. 28,872.77 கோடி செலுத்தப்பட வேண்டும்.
இந்நிலையில், மார்ச் இறுதிக்குள் முதல் கட்டத் தொகையைச் செலுத்தினால், அது நடப்பு நிதியாண்டிலேயே அரசின் வருவாயாகக் கருதப்படும் என்பதால், நிறுவனங்கள் முன்கூட்டியே தொகையைச் செலுத்துமாறு மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேட்டுக் கொண்டார்.
அமைச்சரின் கோரிக்கையை நிறுவனங்கள் ஏற்றுள்ளதாகத் தெரிகிறது. இதன்படி, அதிகபட்சமாக ஏர்டெல் ரூ. 7,833 கோடியும், ஐடியா செல்லுலர் ரூ. 7,790 கோடியும், வோடஃபோன் 6,868 கோடியும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ரூ. 1,106 கோடியும் செலுத்த முடிவு செய்துள்ளன. அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற பிற நிறுவனங்களும் முன்தொகை செலுத்த முடிவு செய்துள்ளன. மீதி தொகையை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் தவணை முறையில் செலுத்த வேண்டும்.