ரூ.1.10 லட்சம் கோடிக்கு அலைக்கற்றை ஏலம்

 

தொலைத்தொடர்பு அலைக்கற்றைகளை விற்பதற்காக, மத்திய அரசால் கடந்த 19 நாள்களாக நடத்தப்பட்டு வந்த ஏலம் புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. இதில், ரூ.1.10 லட்சம் கோடிக்கு அலைக்கற்றைகள் ஏலம் போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
எனவே, அலைக்கற்றையை ஏலம் எடுத்தவர்களின் பட்டியல், அதில் கிடைக்கும் வருவாய் குறித்த விவரங்களை, உச்ச நீதிமன்ற அனுமதியைப் பெற்ற பிறகே தொலைத்தொடர்புத் துறை வெளியிடவுள்ளது.
இந்நிலையில், கடந்த 19 நாள்களாக நடைபெற்ற ஏலம் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
மொத்தம் 4 வகையான அலைக்கற்றைகளுக்கு 115 சுற்றுகளாக ஏலம் நடைபெற்றது.
900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ் ஆகிய அலைக்கற்றைகள்தான் மிக அதிகப்படியாக ஏலம் விடப்பட்டன.
ஏர்டெல், வோடாபோன், ரிலையன்ஸ், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களின் வசமிருக்கும் 22 உரிமங்கள் 2016-ஆம் ஆண்டுடன் காலவதியாகவுள்ள நிலையில், அவற்றுக்கும் சேர்த்து ஏலம் நடத்தப்பட்டது.
800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ் ஆகிய 4 வகை அலைவரிசைகளில் மொத்தம் 380.75 மெகா ஹெர்ட்ஸ் அளவுக்கான அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது.
ஏல ஒப்பந்தப் படி, 2100 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ் வகை அலைக்கற்றைகளை வாங்கியிருக்கும் நிறுவனங்கள் 33 சதவீத கட்டணத்தையும், 900 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ் வகை அலைக்கற்றைகளை வாங்கியிருக்கும் நிறுவனங்கள் 25 சதவீத கட்டணத்தையும் அடுத்த 10 நாள்களுக்குள் (விடுமுறை தினம் தவிர்த்து) செலுத்த வேண்டும்.
மீதமுள்ள தொகையை, 2 ஆண்டு கால சலுகைக்குப் பின்னர், அடுத்த 10 ஆண்டுகளில் தவணை முறையில் செலுத்த வேண்டும்.
ஐடியா, ஏர்டெல், வோடாபோன், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களது பழைய உரிமங்களை தக்கவைத்துக் கொள்வதிலேயே ஆர்வம் காட்டின.
ரிலையன்ஸ் ஜியோ, டாடா டெலிசர்வீசஸ், டெலிவிங்ஸ் (யூனிநார்), ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் புதிய உரிமங்களைப் பெற ஆர்வம் காட்டின என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.