வங்கி ஊழியர்களின் ஊதிய விவகாரம்: மும்பையில் இன்று பேச்சு

வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு விகிதத்தை 11 சதவீதத்திலிருந்து அதிகரிப்பது தொடர்பாக ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகளுக்கும் இந்திய வங்கிகள் உயர் அதிகாரிகளுக்கும் (ஐபிஏ அமைப்பு) இடையே மும்பையில் திங்கள்கிழமை (பிப்.23) பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
வரும் 25-ஆம் தேதி முதல் நான்கு நாள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்டவை அறிவித்துள்ள நிலையில், இந்த இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
ஊதிய விகிதத்தை குறைத்துக் கொள்ளத் தயார்: நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் வங்கி ஊழியர்களுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர் முதல் ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டிய நிலையில் இந்திய வங்கிகளின் உயர் அதிகாரிகள் அமைப்பு (ஐபிஏ) உள்ளது. ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினாலும், பிரதான ஊதிய உயர்வு கோரிக்கை காரணமாகவே பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
மும்பையில் இன்று பேச்சு: இதுவரை நடைபெற்ற 16 கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து ஊதிய உயர்வை வலியுறுத்தி புதன்கிழமை (பிப்ரவரி 25) முதல் நான்கு நாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இறுதியாக மும்பையில் வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகளுக்கும் இந்திய வங்கிகள் உயர் அதிகாரிகளுக்கும் (ஐபிஏ) இடையே திங்கள்கிழமை (பிப்ரவரி 23) பிற்பகல் 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.