ஏழு பொதுத் துறை நிறுவனங்களை புத்துயிரூட்ட மத்திய அரசு ஒப்புதல்



நஷ்டத்தில் இயங்கி வரும் ஏழு பொதுத் துறை நிறுவனங்களைப் புத்துயிரூட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் டாக்டர் வி. மைத்ரேயன் எழுப்பியிருந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அமைச்சர் ஜெயந்த் சின்ஹா செவ்வாய்க்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
பொதுத் துறை நிறுவனங்கள் மறுசீரமைப்புக்கான வாரியம் (பிஆர்பிஎஸ்இ) அளித்த பரிந்துரைகளின் பேரில், எச்எம்டி பேரிங்ஸ் லிமிடெட், ரிச்சர்ட்சன் அன்ட் க்ருடஸ் லிமிடெட், துங்கபத்ரா ஸ்டீல் புராடக்ஸ் லிமிடெட், எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட், டயர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், சென்ட்ரல் இன்லேண்ட் வாட்டர் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் லிமிடெட், ஹூக்ளி டாக்ஸ் அன்ட் போர்ட் என்ஜினீயரிங் லிமிடெட் ஆகிய ஏழு பொதுத் துறை நிறுவனங்களையும் பங்குவிலக்கல் கூட்டு முயற்சியின் மூலம் புதுப்பிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பங்குவிலக்கல் துறையானது தற்போது டயர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மட்டுமே அரசின் பங்குகளைக் குறைப்பதில் ஈடுபட்டுள்ளது.
அதேபோன்று, நிகழாண்டின் செப்டம்பர் 10-ஆம் தேதி அன்று ஓஎன்ஜிசி, கோல் இந்தியா லிமிடெட், என்எச்பிசி ஆகிய மூன்று பொதுத் துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளில் பங்குவிலக்கல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று ஜெயந்த் சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.