வாடிக்கையாளர் அனுமதியின்றி கூடுதல் சேவை, கட்டணம் பிடித்தம்: தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக 10 லட்சம் புகார்கள்

வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி மதிப்புக் கூட்டு சேவைகளை வழங்கி, கட்டணம் பிடித்தம் செய்ததாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது, நிகழ் ஆண்டில் செப்டம்பர் வரை, 10 லட்சத்துக்கும் அதிகமான புகார்கள் பதிவாகி உள்ளன என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
அரசு, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தங்களின் கைப்பேசி வாடிக்கையாளர்களுக்கு தொலைத்தொடர்பு சேவையுடன், பிரபலங்கள் குறித்த தகவல்கள், உடல்நலக் குறிப்புகள், ஜோதிட தகவல்கள் உள்ளிட்ட மதிப்பு கூட்டு சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த சேவைகளை வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி வழங்கியுள்ளதாக, நிகழ் ஆண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் வரை மொத்தம் 10,37,576 புகார்கள் பதிவாகி உள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக ஆகஸ்ட்டில் 1,31,048, குறைந்தபட்சமாக ஜனவரியில் 84,583 புகார்களும் அடங்கும். இதே காலகட்டத்தில், நாடு முழுவதும் மொத்தம் 56.88 கோடி வாடிக்கையாளர்கள் மதிப்பு கூட்டு சேவைகளை பெற்றுள்ளனர். 9.35 கோடி வாடிக்கையாளர்கள் இந்த சேவை வேண்டாம் என நிராகரித்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள் மீதான தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இந்த அத்துமீறலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் அவ்வப்போது எடுக்கப்பட்டு வருகிறது என டிராய் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த புகாருக்கு உள்ளாகி உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பெயர்களை தெரிவிக்கவில்லை. தங்களுக்கு வழங்கப்படும் மதிப்பு கூட்டு சேவையை வேண்டாம் என எண்ணும் அலைப்பேசி வாடிக்கையாளர்கள் அதுதொடர்பாக, 155223 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமோ, நேரடியாக தொடர்புக் கொண்டோ தகவல் தெரிவிக்கலாம்.