தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதற்கு முன்பு விசாரணை

தொலைத்தொடர்பு சேவை கேட்டு விண்ணப்பிக்கும் நிறுவனங்களின் இயக்குநர்களின் பின்புலம், நிதி ஆதாரப் பின்னணி போன்றவை குறித்து மத்திய உளவுத் துறையின் விசாரணை அறிக்கை கிடைத்த பிறகே, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு மத்திய உள்துறை யோசனை தெரிவித்துள்ளது.
மத்திய தொலைத்தொடர்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகபட்சமாக 49 சதவீதம் அளவுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்கும் தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன.
இந்நிலையில், மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு மத்திய உள்துறைச் செயலர் அனில் கோஸ்வாமி அண்மையில் எழுதியுள்ள கடிதத்தில், "மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் தொலைபேசி அல்லது செல்போன் சேவை வழங்க அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் நிறுவனங்களின் இயக்குநர்கள், அவற்றின் நிதி ஆதாரப் பின்னணி ஆகியவை குறித்து மத்திய உளவுத் துறை விசாரணை நடத்தி அதில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க வேண்டும். தேசப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த யோசனையை பரிசீலிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது, தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் இயக்குநர்களின் பின்புலம் பற்றி மத்திய உளவுத் துறை விசாரிக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. அந்த விசாரணை அறிக்கை திருப்தியாக இருந்தால்தான் தொலைக்காட்சி நிறுவனங்களின் விண்ணப்பத்தை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை சரிபார்த்து அனுமதி வழங்கும். அந்த அனுமதிக் கடிதம் இருந்தால்தான், அலைக்கற்றை உரிமம் கோரியோ அல்லது தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் மூலமோ மத்திய தொலைத்தொடர்புத் தறையிடம் சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சிகள் விண்ணப்பிக்க முடியும்.
இதேபோன்ற கெடுபிடிகளை இனி செல்போன் மற்றும் தொலைபேசி சேவை வழங்க அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் நிறுவனங்களிடமும் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை யோசனை தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போதைய தொலைத்தொடர்புத் துறை சட்ட விதிகளின்படி, ஒரு முறை உரிமம் பெற்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை திடீரென்று நிறுத்திவிடக் கூடிய அதிகாரம் மத்திய அரசுக்கு உடனடியாக இல்லை. தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதை நிரூபித்தால் மட்டுமே அந்த நிறுவனங்களின் செயல்பாட்டை மத்திய உள்துறையும், தொலைத்தொடர்புறையும் இணைந்து முடக்க முடியும். அதன் பிறகும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நீதிமன்றம் அல்லது தொலைத்தொடர்பு வழக்குகள் தீர்ப்பாயம் ஆகியவற்றில் முறையிட்டால் பல்வேறு சட்டச் சிக்கல்களும் ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டே தொலைத்தொடர்புத் துறைக்கு மேற்கண்ட யோசனையை மத்திய உள்துறை அளித்துள்ளது' என்றார்.