"வாடிக்கையாளர் தேவைக்கேற்ப பிஎஸ்என்எல் செயல்பட வேண்டும்'


பொதுத் துறையைச் சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் நிறுவனமானது (பி.எஸ்.என்.எல்.) வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப தனது செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
நாடு முழுவதிலும் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர்கள் கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது. அக்கூட்டத்துக்குத் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமை தாங்கிப் பேசினார்.
இது குறித்துப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
பி.எஸ்.என்.எல். செயல்பாடுகளை நாம் மேம்படுத்த வேண்டிய அவசியமுள்ளது. இப்போதைய நிலையில் இந்நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்தாலும் மீண்டும் லாபம் பெறும் பாதைக்குத் திரும்ப இயலும்.
பொதுத் துறையைச் சேர்ந்த நிறுவனமாக இருந்தாலும், தனியாருக்கு சரி நிகராகப் போட்டியிடும் விதத்தில், பி.எஸ்.என்.எல். தனது செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். தனது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்கள் வகுத்து, முனைப்பாகச் செயல்பட வேண்டும்.
தேசிய ஆப்டிகல் ஃபைபர் நெட்வர்க் திட்டத்தின் கீழ், நாடு முழுவதுமுள்ள 2.5 லட்சம் பஞ்சாயத்துகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்ப இணைப்புகளை வழங்க வேண்டும். அதையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இலக்குகளை அடைவதற்குத் தீவிரமாக செயலாற்ற வேண்டும். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான இலக்கு 2017-ஆம் ஆண்டு மார்ச் ஆக இருந்தது. ஆனால் 2016-ஆம் ஆண்டு டிசம்பருக்கு இதனை செயல்படுத்த வேண்டுமென முடிவாகியுள்ளது.
நாடு முழுவதும், பல்வேறு சேவைகளை விரைந்து அளிக்கும் தொழில்நுட்பத் தொடர்பை ஏற்படுத்த உதவும் "டிஜிட்டல் இந்தியா' என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்துள்ளார். இதனைச் செயல்படுத்த பி.எஸ்.என்.எல். தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று தாம் வலியுறுத்தியதாக ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த 2013-2014 நிதி ஆண்டில் பி.எஸ்.என்.எல். நிறுவனம், நிகர அளவில் ரூ. 7,085 கோடி இழப்பை சந்தித்தது. 2012-13 ஆண்டில் ரூ. 7,884 கோடியும், 2011-12 ஆண்டில் 8,851 கோடி அளவிலும் இழப்பு ஏற்பட்டது