வருங்கால வைப்பு நிதி திட்டம்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 1,000 ஆக உயர்வு!


புதுடெல்லி: வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஓய்வு பெறும் தொழிலாளர்களின் குறைந்த பட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து நிரந்தர தொழிலாளர்களும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் (இபிஎப்) சேர்க்கப்பட்டு உள்ளனர். இதற்காக அவர்களது ஊதியத்தில் மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. தற்போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாத சம்பள வரம்பு ரூ. 6,500 ஆக உள்ளது.

இந்த சம்பள வரம்பு ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்து இருந்தார். இந்நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையகம் இன்று வெளியிட்டுள்ளது. 

அதில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேருவதற்கான தொழிலாளர்களின் மாத வருமான உச்சவரம்பு ரூ. 6,500–ல் இருந்து ரூ. 15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஓய்வு பெறும் தொழிலாளர்களின் குறைந்த பட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.