கேரள பிஎஸ்என்எல்: 2013-14ஆம் நிதியாண்டில் ரூ.412 கோடி லாபம்


கேரள மாநிலத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் 2013-14ஆம் நிதியாண்டில் ரூ.412 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டை விட ரூ.126 கோடி அதிகம் ஆகும்.
இதுகுறித்து கேரள பிஎன்என்எல் தலைமைப் பொது மேலாளர் எம்.எஸ்.எஸ். ராவ், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
2013-14ஆம் நிதியாண்டின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.2,820 கோடியாகும். மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி வசதியில், நாட்டிலுள்ள இதர சேவை அளிக்கும் மொபைல் நிறுவனங்களைக் காட்டிலும் கேரள பிஎன்என்எல் நன்றாக வளர்ச்சி பெற்றுள்ளது.
கேரளம் முழுவதும் 500 வாடிக்கையாளர் சேவை மையங்களை நிறுவும் திட்டத்தின் ஒரு பகுதியாக, 142 வாடிக்கையாளர் சேவை மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது இங்கு மொத்தம் 268 வாடிக்கையாளர் சேவை மையங்கள் உள்ளன.
தேசிய கண்ணாடி இழை வலையமைப்புத் திட்டத்தின் (என்ஓஎஃப்என்) ஒரு பகுதியாக, கேரளத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் நடப்பு நிதியாண்டில் பிராட்பேண்ட் இணைய வசதியை பிஎஸ்என்எல் வழங்க உள்ளது.
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் மையம், அஞ்சல் அலுவலகங்கள், அக்ஷயா மையங்கள் ஆகியவற்றைத் தவிர, வாடிக்கையாளர்கள் இனி ஆன்லைனிலும் கட்டணம் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது என்று ராவ் கூறினார்.

3.6 லட்சம் புதிய இணைப்புகள்: கொச்சியில், எர்ணாகுளம் மண்டல பிஎஸ்என்எல் முதன்மைப் பொது மேலாளர் ஜீ. முரளிதரன் கூறுகையில், "2014-2015 காலகட்டத்தில் புதிதாக 32,000 தரைவழித் தொடர்பு தொலைபேசி இணைப்புகளும், 53,000 பிராட்பேண்ட் தொடர்புகளும், 3.6 லட்சம் கைபேசி இணைப்புகளும், 7,500 வைமேக்ஸ் தொடர்புகளும் ஏற்படுத்த உத்தேசித்துள்ளோம்.
மொபைல் சேவையின் கவரேஜை அதிகரிக்கும் விதமாக 2ஜி கோபுரங்கள் 79ம், 3ஜி கோபுரங்கள் 372ம் அமைக்கப்படும்' என்றார்.