தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சிஏஜி தணிக்கை: ஃபிக்கி கவலை

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் குறித்து தணிக்கை செய்ய தலைமை கணக்குத் தணிக்கையாளருக்கு (சி.ஏ.ஜி.) உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இதை பிற பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தும் நிலை உருவாகும் என்று இந்தியா வர்த்தக சபைகள்-தொழிலகங்களின் சம்மேளனம் (ஃபிக்கி) கவலை தெரிவித்துள்ளது.
ஃபிக்கி தலைவர் சித்தார்த் பிர்லா புது தில்லியில் இது குறித்து தெரிவித்தது: தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அலைக்கற்றை பயன்பாடு தொடர்பான வருவாய் கணக்குகளை சி.ஏ.ஜி. தணிக்கை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இத் தணிக்கை நடவடிக்கைகளை மற்ற பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் அபாயம் உள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய உத்தரவானது, நிறுவனங்களின் ஒப்பந்த நடவடிக்கைகளின் புனிதத் தன்மையையே கேள்விக்குறியாக்கியுள்ளது. வெளியார் தணிக்கை செய்வது என்பது ஒப்பந்தத்தில் ஒரு ஷரத்தாக இருந்தால், அது தானாகவே செயல்பாட்டுக்கு வரும். ஒப்பந்தங்களில் முதலில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை அனைவரும் ஏற்க வேண்டும். வர்த்தகத்தில் பல நிலைகளில் வருவாய் ஈட்ட அரசு சில முறைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒப்பந்தங்கள் பிற்காலத்தில் நீதிமன்ற பரிசீலனைக்கு ஆளாவது என்பது பல குழப்பங்களை ஏற்படுத்தும் என்று ஃபிக்கியின் தலைவரான சித்தார்த் பிர்லா தெரிவித்துள்ளார்.
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சங்கங்களான ஏ.யூ.எஸ். பி.ஐ., ùஸல்லுலர் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு முறையீட்டு மனுவை
நிராகரித்து, உச்ச நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது.